Monday, February 19, 2024

கண்களே டெலஸ்கோப்...


நம்பளைத் தான் எல்லாம் சுத்திக்கிட்டு இருக்குதுன்னு நாமல்லாம் நினைச்சிட்டிருக்கும்போது, இருக்கிறோம்னு நமக்குச் சொன்ன ஆளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்!
Nicolaus Copernicus... (1473 - 1543)
ஆம், பூமிதான் தன்னைத்தானேயும் சூரியனையும் சுற்றுவதை சுட்டிக் காட்டினார். அந்த Heliocentric theory யை எழுதி முடிக்க அவர் செலவிட்டது கிட்டத்தட்ட அரை வாழ்நாள்! கொடுத்து விட்டு மறைந்து விட்டார். ஆமாம் அது புத்தகமாக வெளியான வருடம் தான் அவரது கடைசி வருடம். அதற்கு முன்பிருந்த அரிஸ்டாட்டில், தொலமி (Ptolemy) இருவரின் கருத்துக்களும் தடம் புரண்டன.
அப்பப்பா! என்று ஆச்சரியப்பட வைத்தவரை 'வானியலின் அப்பா' என்றதில் ஆச்சரியம் இல்லைதான். முன்னரே சிலர் அதைக் கோடி காட்டியதுண்டு என்பார்கள்.
இவர் சொன்னதில் சில சந்தேகங்களும் கிளம்பாமல் இல்லை. சூரிய மண்டலத்துக்கு மட்டுமல்ல, பிரநாம தான் சுத்திட்டு பஞ்சத்துக்கே மையம் சூரியன் என்று அவர் குறிப்பட்டது ஒன்று.
கலிலியோ, நியூட்டன், கெப்லர் எல்லாம் கண்டிப்பாக இவரைக் கொண்டாடி இருப்பாங்க மனசிலே, அவங்க தொடர்ந்து நடந்து செல்ல பாதை போட்டவர் ஆச்சே!
சந்திரனில் கிடக்கும் பென்சிலைப் பார்க்கிற அளவுக்கு இப்ப நம்ம கிட்ட டெலஸ்கோப் இருக்கு. ஆனால் அவரிடமிருந்த டெலஸ்கோப் அவருடைய இரண்டு கண்கள்தான். ஆமா, நாம் வெறுமே பார்த்த ஆகாயத்தை அவர் வேறு மாதிரி பார்த்தார்.
போலந்தில் வானியலும் ஜோதிடமும் கணிதமும் படித்துவிட்டு இத்தாலிக்கு வந்தார். அங்கே பிரபலமாயிருந்தார் நோவேரா. அவர்தான் வருடா வருடம் வானிலையையும் நாட்டின் நிலையையும் கணித்துச் சொல்ல வேண்டும். அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டவர், அதிவிரைவில் பிரபலம் ஆனார். சீசரின் ஜூலியன் காலண்டரை வடிவமைக்க இவரிடம் ஆலோசிக்கிற அளவுக்கு.
சமீபத்தில ஒரு தனிமத்துக்கு இவரு பேரை இட்டாங்க. 'Copernicium'.
சொன்னாரு பாருங்க நச்னு ஒண்ணு:
'நமக்கு என்ன தெரியும் என்பது நமக்குத் தெரிந்திருப்பதும், நமக்கு என்ன தெரியாது என்பது நமக்குத் தெரிந்திருப்பதும் தான் உண்மையான அறிவு.'

Sunday, February 18, 2024

16 வயதினிலே...


16 வயதினிலே மனதில் சினிமா ஆர்வத்துடன் ஷூட்டிங் பார்க்க அந்த ஸ்டுடியோவுக்கு நுழைந்தாள் அந்தப் பெண். நடித்துக் கொண்டிருந்த ராஜ்கபூர் கண்ணில் பட்டார். தான் எடுத்துக் கொண்டிருந்த Barsaat படத்துக்கு ரெண்டாவது ஹீரோயினைத் தேடிக் கொண்டிருந்த அவர், ஸ்கிரீன் டெஸ்டுக்கு அழைத்தார். டெஸ்ட் முடித்துவிட்டு சஸ்பென்ஸோடு அமர்ந்திருந்தவள் அங்கே எல்லோருக்கும் ஸ்வீட் வழங்கப்படுவதைப் பார்த்து என்னவென்று விசாரித்தால் நீ பாஸாயிட்டே என்றார்கள். இப்படியாக "ஜீயா பேகரார் ஹை ..." என்ற அந்த சூபர் ஹிட் பாடலைப் பாடிக்கொண்டே நுழைந்தார் படவுலகில். நிம்மி என்று பேர் சூட்டியதும் ராஜ் கபூரே. தன் முந்திய படத்தின் (‘Aag’) நாயகியின் பெயரை.
Nimmi… (1933 - 2020) இன்று பிறந்த நாள்!
நிம்மி! கம்மியின்றி அழகை ஆண்டவன் அள்ளிக் கொடுத்த நிம்மி! இந்தித் திரையுலகின் முதல் அழகுப் பதுமை எனச் சொல்லலாம் இவரை. அப்பாவி கிராமப் பெண் வேடத்துக்கு அபாரமாக பொருந்தும் முகம். Incidentally, ‘குமுதம்' படத்தின் ரீமேக் 'Phooja Ki Phool’ -இல் சௌகார் வேடத்தில் இவரே.
லதா மங்கேஷ்கர் தமிழில் முதல் முதலாக பாடிய பாட்டு நினைவிருக்கிறதா? "நீ எந்தன் கண்ணாளன்.. கரை நோக்கி போகிறாய்..." (அந்த "தையாரே தையர..”) படத்தில் அந்தக் காட்சியில் நிம்மி, என்னவொரு முகபாவம்! படம் 'Uran khatola'. (தமிழில் 'வானரதம்' திலீப் குமார்.) லிங்க் கீழே.
கொஞ்ச காலம் கொஞ்ச படங்கள் என்றாலும் திலீப், தேவ், ராஜ் என்று பிரபல நடிகர்களுடன்.. கே.ஏ.அப்பாஸ், சேதன் ஆனந்த், விஜய் பட் என்று பிரபல டைரக்டர்களுடன்.
இந்தியாவின் முதல் கலர் படத்தில் (‘Aan’) நடிக்க அது ‘The Savage Princess’ என்று அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ரிலீசானது. மறுத்ததினால் இழந்த படம் ‘Woh Kaun Thi?’(தமிழ் ‘யார் நீ?’)
மது பாலாவுக்கு ஒரு ‘Mughal-e-Azam’, பீனா ராய்க்கு ஒரு ‘Taj Mahal’ என்றால் ஒரு நிம்மிக்கு ஒரு ‘Love and God’. என்ன, எடுத்து முடிக்க இருபத்தி மூணு வருஷம் ஆகிவிட்டது. தன் குட்பை படமாக பிரியமாக அவர் தேர்ந்தெடுத்த படம்! நாயகனாக நடித்த குருதத் இறந்துவிட சஞ்சீவ் குமார் நடித்தார். டைரக்டர் K. Asif மறைந்துவிட மறுபடி கிடப்பில். அவர் மனைவியின் அரும் முயற்சியில் படம் ரிலீஸானதோ, நிம்மி அந்த லைலா மஜ்னு கதையில் லைலாவாக ஜொலித்தாரோ...

>><<

ஒரு புது உலகத்திற்கு...


சின்னப்பெண் லூயிஸுக்கு சுற்றியுள்ள உலகைக் கண்டால் பயம். வானம் கறுப்பா இருக்கே? மரத்துக்குள் என்ன ஒளிந்திருக்குமோ? அந்த வீடு பாழடைந்து போயிருக்கே? ...தனிமை அவளை வாட்டுகிறது. லைப்ரரிக்கு செல்லுகிறாள். அங்கேயுள்ள புத்தகங்கள் அவளை ஒரு புது உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. விதவிதமான விஷயங்களைப் படிக்கிறாள். கற்பனை ராஜ்ஜியத்தில் கோலோச்சுகிறாள். இப்பொழுது அவள் ஒரு புது உலகத்தை பார்க்கிறாள். புத்தகங்கள் அவள் பயத்தை அகற்றி விட்டன. காணும் உலகை நேசிக்கிறாள்..
இது பிரபல அமெரிக்க நாவலாசிரியர் Toni Morrison தன் மகனுடன் சேர்ந்து எழுதிய சிறுவர் சித்திரக் கதை. (‘Please Louise')
Toni Morrison… இன்று பிறந்த நாள்!
நோபல், புலிட்ஸர் இரண்டு பரிசும் பெற்றவர் என்றால் இவரைப் பற்றி வேறு சொல்ல வேண்டுமா என்ன?
புலிட்சர் பரிசு பெற்ற 'Beloved'... அந்த இருபத்தைந்து வருடங்களில் எழுதப்பட்ட புதினங்களில் மிகச் சிறந்தது என்று கொண்டாடப்பட்ட புத்தகம் அது. பிற்பாடு திரையிலும் ஒளிர்ந்தபோது பிரபல Oprah Winfrey அதில் நடித்தார்.
மாபெரும் புத்தக பதிப்பகமான Random House இல் எடிட்டராக இருந்ததும் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியில் ஆசிரியராக இருந்ததும் இங்கே ஞாபகப்படுத்தலாம். 2012 இல் அதிபர் பரக் ஒபாமாவிடம் Presidential Medal of Freedom ஐ பெற்றுக்கொண்டார்.
பொதுவாக விமர்சகர்களால் கொண்டாடப்படும் நாவல்கள் விற்பனையில் சறுக்குவது உண்டு, இவருடையது விற்பனையும் படைத்தது.
வாடகை தர முடியாததால் வாழ்ந்திருந்த வீடு தீ வைக்கப்பட்டபோது இவர் வயது இரண்டு. வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள குடும்பம் தனக்குக் கற்றுக் கொடுத்தது என்று சொல்லும் இவர் சின்ன வயதில் விரும்பிப் படித்தது லியோ டால்ஸ்டாயும் ஜேன் ஆஸ்டினும்.
பிரபல வாசகம் மூன்று இதோ..
‘நீங்கள் படிக்க விரும்பும் ஒரு புத்தகத்தை இதுவரை யாரும் எழுதியிராவிட்டால், அதை நீங்கள் எழுதவேண்டும்.’
‘உங்களால் கற்பனை செய்ய முடியாத ஒன்றை உங்களால் அடைய முடியாது.’
‘அறிவின் சக்தியிலும் அழகின் வீரியத்திலும் நம்பிக்கை உடையவள் நான். ஆகவே என்னுடைய பார்வையில் உங்கள் வாழ்க்கை ஏற்கனவே கலாபூர்வமானது. அதை நீங்கள் கலை ஆக்குவதற்காகக் காத்திருக்கிறது.’
இவர் நாவலில் வரும் வசனம் இரண்டு:
‘காதலிப்பவரை விட காதல் ஒருநாளும் பெரிதல்ல.’
‘நேசிக்கும் எந்த ஒன்றையும் ஒருநாளும் இழக்க மாட்டோம்.’