Tuesday, September 23, 2025

இன்றளவும்...


'Rules of Algebra' என்று ஒரு அல்ஜிப்ரா புத்தகத்தை அவர் எழுதினார். என்ன விசேஷம்? அவர் அதை எழுதிய வருடம் 1545.
நெகட்டிவ் எண்களை எப்படி உபயோகிப்பது என்று விளக்கியவர், ஒரு பக்கம் சீட்டாடிக்கொண்டே Probability பற்றியும் எழுதினார். அதில் நிறைய ஜெயித்தார்.
அவர் கண்டுபிடித்த Cardana Shaft என்ற டிரைவிங் ஷாப்டை இன்றளவும் கார்களில் உபயோகிக்கிறார்கள்.
நம்பர் லாக் என்று சொல்கிறோமே அந்த Combination lock -கை அவர்தான் கண்டுபிடித்தார்.
'அசையும் எந்தப் பொருளும் நின்றே ஆகவேண்டும்,' என்றார் ஆணித்தரமாக.
ஆனானப்பட்ட லியானார்டோ டாவின்சி சந்தேகம் கேட்பது இவரைத்தான்.
அவர் பெயர் Gerolamo Cardano. இத்தாலிய கணித மேதை. டாக்டர். பல்கலை வித்தகர்.
இன்று பிறந்த நாள். (1501 -1576)

அழகிய தீயே..


அழகிய தீயே..
...அல்லது கை நிறைய கலகலப்பு எனலாம் படத்தின் பேரை.
சின்ன அழகிய முடிச்சு. (கல்யாணத்திலிருந்து தப்ப, காதலிக்கிறேன் ஒருவரை என்று ஒரு ஆளை அவள் காட்டப்போய், அவனையே கல்யாணம் செய்து வைத்து விடுகிறான் பெண் பார்க்க வந்தவன்!...)
பிரசன்னாவும் நவ்யா நாயரும் சண்டை போட்டுக்கும்போது நாமும் சண்டை போட்டுக்கறோம்; அவங்க சமாதானமாகும்போது நாமும்... கூடவே பயணித்து கூடவே சிரித்து…
டயலாக் டெலிவரிக்கு இந்தப் படம் ஒரு பாடம். சரியான ஏற்ற இறக்கங்களுடன் பேசும் அழகு! ஒவ்வொரு டயலாக்கும் அதனதன் இயல்பான தன்மையுடன்... ஒன்றிலிருந்து ஒன்று இயல்பான தொடர்புடன்... அந்த இடத்தில் அந்தப் பாத்திரம் என்ன பேசுமோ அது! With a sense of humour throughout! (வசனம்: விஜி)
அண்ணாச்சி பாத்திரத்திலிருந்து எம் எஸ் பாஸ்கரை பிரித்தெடுக்கவே முடியாது... அப்படியொரு memorable performance!
Casting இந்தப் படத்தில் கச்சிதமாக... பாத்திரங்களும் நடிகர்களும் அப்படிப் பொருந்திப் போவார்கள். கதாநாயகனின் அம்மாவிலிருந்து. காஸ்ட்யூம் சரியான்னு கேட்கிற பெண் வரை.
டைரக்டர் ராதாமோகனுக்கு இந்தப் படம் ஒன்று போதும் பேர் சொல்ல. நமக்கும் இந்தப் படம் ஒன்று போதும் அடிக்கடி நினைத்து சிரிக்க.
><><><

Friday, September 19, 2025

ஆறே படங்கள்...


கல்லூரியில் படிக்கும் தன் உறவுக்கார பெண் மிஸ் சிம்லா போட்டியில் வென்றதைப் பார்த்து அவரைத் தன் அடுத்த படத்துக்கு ஹீரோயினாக்க அழைத்து வந்தார் அண்ணன். அதன் ஹீரோவான தம்பி அவரை விரும்பி காதல் அரும்பி அவருடனான நாலாவது படத்தின்போது மணந்து கொண்டார். வேறாருடனும் அவர் ஹீரோயினாக நடிக்கவுமில்லை.

கல்பனா கார்த்திக். இன்று பிறந்த நாள்.
கணவரை யூகித்திருப்பீர்கள். த ஒன் அன்ட் ஒன்லி தேவ் ஆனந்த்.
ஆறே படங்கள்! அத்துடன் நடிப்பதற்கு ‘கட்’ சொல்லிவிட்டு படத் தயாரிப்பில் கணவருக்குத் துணையானார்.
“ஆங்கோன் மே க்யாஜி…” என்று தேவ் ஆனந்துடன் அவர் பாடிவரும் அந்த எஸ்.டி.பர்மன் பாடல் காட்சிக்கு இப்போதும் யூ ட்யூபில் மில்லியன் தாண்டி வியூஸ் குவிகிறது. ஒளியும் நிழலும் ஒளிந்து விளையாடும் ஷாட்டுகளில் ரம்மியமாக வளைய வருவார்.
அப்புறம் ‘டாக்ஸி டிரைவரி’ல் அந்த சூபர்ஹிட்! “ஜாயே தோ ஜாயே கஹான்…” சோகத்திலும் சோபித்தார்.